மேலூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை
பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010,03:31 IST
மேலூர் : சென்னை உட்பட சில மாவட்டங்களில் ரவுடியாக செயல்பட்ட 'காட்டான்' சுப்பிரமணியன், மேலூர் அருகே மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ளது கோட்டநத்தம்பட்டி. இவ்வூரைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் சுப்பிரமணியன்(47). உள்ளூரில் ரவுடியாக வலம் வந்த இவர் பின்னர் சென்னைக்கு சென்று "காட்டான்' சுப்பிரமணியனாக மாறினார். சென்னை எண்ணூர் பகுதியில் தனது ரவுடி சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து என பல வழக்குகள் இவர் மீது பதிவானது. இதையடுத்து, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தன் கைவரிசையை காட்ட ஆரம்பித்தார். மேலூரில் 1996ல் குண்டாஸ் பிரிவில் இவர் கைது செய்யப்பட்டார். இவரை என்கவுன்டரில் கொல்ல போலீசார் முடிவு செய்தனர். பல் வேறு இடங்களில் இவர் மீது போடப்பட்ட வழக்குகளுக்கு போதிய ஆதாரங்களும், சாட்சிகளும் இல்லாததால் பெரும்பாலான வழக்குகளில் விடுதலையானார்.
மேலூர் மற்றும் கீழவளவு ஸ்டேஷனில் இவர் மீது ஆட்களை மிரட்டியதாக இரு வழக்குகள் மட்டுமே பதிவானது. 2007 முதல் மேலூர் கோட்ட நத்தம்பட்டியில் வசித்து வந்தார். அங்கிருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள நயித்தாம்பட்டியில் எட்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கு மாந்தோப்பு ஒன்றை உருவாக்கினார். நேற்று முன்தினம் இவருக்கு சொந்தமான ஸ்கார்பியோ கார் சர்வீசுக்கு அனுப்ப பட்டது. இதனால் நேற்று காலை 6 மணியளவில் நயித்தான்பட்டி தோட்டத்திற்கு டி.வி.எஸ்., சாம்ப் வண்டியில் சென்றார். பின்னர் 8.30 மணிக்கு ஊர் திரும்பிய போது, ஏழைகாத்தம்மன் நகர் அருகில் புதருக்குள் மறைந்திருந்த இரண்டு பேர் இவரை திடீரென தாக்கினர். இதனால், மொபட்டை கீழே போட்டுவிட்டு ஓடிய சுப்பிரமணியை விரட்டி விரட்டி வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
மாவட்ட எஸ்.பி., மனோகர் உட்பட உயரதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர்.இரு பைக்குகளில் குறைந்தது நான்கு பேர் வந்திருக்கலாம் என தெரிகிறது. கீழவளவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கட்டப்பஞ்சாயத்து "காட்டான்': கொலையான 'காட்டான்' சுப்பிரமணியனுக்கு சென்னையில் தங்கம் என்ற மனைவியும் ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். கோட்டநத்தம்பட்டியில் கவிதா என்ற மனைவியும் இரு ஆண், ஒரு பெண் குழந்தைகளும் உள்ளனர். மேலூர், சிவகங்கை, காரைக்குடி உட்பட சில பகுதிகளில் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் அடாவடியாக இவர் இடங்களை வாங்கி விற்றார். தொடர்ந்து கட்ட பஞ்சாயத்துகள் செய்து பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment